துறையூர் செச்சையின் (அரண்மனை) வரலாறு


துறையூர் செச்சையின் (அரண்மனை) வரலாறு


துறையூர் பெரிய ஏரியில் உள்ள செச்சை என்ற இந்த கட்டிடம் கி.பி 14 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை. 600 ஆண்டுகளைக் கடந்தும் அசையாமல் நம்மை அதிசயப்படுத்தும் அற்புதமான வடிவமைப்பும் கட்டுமானமும் கொண்டு துறையூருக்கு பொக்கிஷமாக விளங்குகிறது நமது நீராழி.

மேலும், இந்த கட்டிடம் ஜமீன்தார்கள் துறையூரை ஆண்ட காலத்தில் கட்டிய வசந்தமாளிகை என்றும், உல்லாச பொழுது போக்கு கூடம் என்றும், ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்ட வசந்த மண்டபம் என்றும் ஆளுக்கு ஆள் கூறுவது தவறு. இது ஒரு ஆன்மீக தளம். வீரசைவர்கள் ( லிங்கம் கட்டி அய்யர் ) தங்கள் கழுத்தில் ஒரு பெட்டகம் கட்டியிருப்பார்கள், அந்த பெட்டகத்தின் உள்ளே லிங்கம் இருக்கும். தினம் அவர்கள் தங்கள் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். கழுத்தில் கட்டியிருக்கும் அந்த பெட்டகத்திற்கு பெயர் தான் செச்சை.

இப்பொழுது ஏரியின் நடுவில் நாம் பார்க்கும் இந்த கட்டிடம், அந்த பெட்டகத்தின் வடிவில் இருப்பதால் செச்சை என்று அழைக்கப்பட்டது. மேலும், திருவண்ணமலையில் ஆதி சிவப்பிரகாச ஸ்வாமிகள் என்பவர் வீர சைவ ஆதீனத்தை தோற்றுவித்தவர். இவர் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிறந்தவர், ஓங்கார குடில் ஆசானால் சுட்டிக்காட்டப்பட்ட மகான்கள் மெய்கண்ட தேவர், அருள்நந்தி சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் மற்றும் குகை நமசிவாயர். இவர்களை மானசீகமாக குருவாக ஏற்று அவர்களின் உபதேசங்களைக் கடைபிடித்து நடந்தவர்.


திருவண்ணாமலையில் மகான் ஆதி சிவப்பிரகாச ஸ்வாமிகள் வீரசைவ ஆதீனத்தை நிறுவி செயல்பட்ட காலத்தில் இங்கே துறையூரை ஆண்ட மகாராஜா காசி ஸ்தல யாத்திரை சென்றதால் அவருடைய தம்பியான லிங்கதுரையை மன்னராக நியமித்து சென்றார். மன்னரான லிங்கதுரை அவர்கள் துறையூர் நந்திகேஸ்வரர் ஆலயத்திற்கு தனி தீர்த்த குளம் வேண்டும் என்று இப்பொழுது உள்ள தெப்பகுளத்தை மிகுந்த செலவில் மக்களுக்காக உருவாக்கினார். மேலும் அன்னதானம், சொர்ணதானம் இவைகளையும் மக்களுக்கு வழங்கினார்.

இதற்க்கிடையில் காசி சென்ற மகாராஜா திரும்பியபோது தன்னுடைய அனுமதி இன்றி கஜானா முழுவதும் காலியாக போனதை கண்டு கோபமுற்றார். இதற்கு காரணமான தம்பி லிங்கதுரையை சிரச்சேதம் செய்ய உத்தரவு இட்டார். ஆனால், மன்னர் லிங்கதுரை மக்களின் அன்பையும், மந்திரிகளின் அன்பையும் பெற்றதால், மந்திரிகள் அவரை கொல்லாமலே அவர் தப்பி போக அனுமதித்தனர். தப்பி சென்ற மன்னர் திருவண்ணாமலை சென்ற போது, அங்கு மகான் ஆதி சிவபிரகாச சுவாமிகளை கண்டு அவர்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடன்னார். 

இதற்கிடையில் துறையூரை ஆண்ட மகாராஜா வயதானதாலும், தனக்கு வாரிசு இல்லாமையாலும், தமக்கு பிறகு இந்த நாட்டை ஆளப்போவது யார் என வருத்தமுற்றார். மேலும் தம் தம்பி லிங்கதுரையை சிரச்சேதம் செய்ததையும் நினைத்து நினைத்து கவலையுற்றார். அவரது வருத்தத்தை உணர்ந்த மந்திரிகள் மன்னர் லிங்கதுரையை தாங்கள் கொல்லவில்லை எனவும் அவர் உயிரோடு திருவண்ணமலையில் இருப்பதையும் தெரிவித்தனர். அதைக்கேட்ட மகாராஜா மகிழ்ந்து தன் தம்பியை மீண்டும் அரசு ஏற்க அழைத்துவருமாறு உத்தரவிட்டார். ஆனால் குருநாதரை விட்டு பிரிய முடியாது என்று லிங்கதுரை அவர்கள் துறையூர் வரவும், மீண்டும் அரசராகவும் மறுத்துவிட்டார்.


இந்தநிலையில் மகாராஜா தம்பியை மீண்டும் அரசாள் வைக்கவேண்டும் என்ற முடிவில், தம்பி குருநாதரை பிரிய மாட்டார் ஆகவே மகான் ஆதி சிவபிரகாச சுவாமிகளை வரவழைத்து விட்டால், தம்பி கண்டிப்பாக மீண்டும் துறையூர் வருவான் என்றும் முடிவு செய்தார். அதற்கு உண்டான வழியாக குருநாதரும் அவர்தம் சீடர்களும் தங்க தமது அரண்மனைக்கு எதிரேயே ஒரு மடம் ஒன்றை கட்டினார். அதுதான் இப்போது பிரசன்னா திருமண மகாலுக்கு அருகே உள்ள பெரிய மடம் ஆகும். மடம் தயாரானதும் தம் எண்ணப்படி மகான் ஆதி சிவபிரகாச சுவாமிகளை அவர்தம் சீடர்களுடன் எழுந்தருள் செய்தார். குருநாதரின் உதவியோடு தம்பியை மீண்டும் மன்னராக்கினார்.

மன்னரான லிங்கதுரை அவர்கள் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும் அவர்களும் தம் குருநாதரின் உபதேசங்களை ஏற்று வளமான வாழ்க்கையை பெற வேண்டும் என்றும் வேண்டி அமைக்கப்பட்டது தான் ஏரியின் நடுவே அமைந்துள்ள இந்த செச்சை கட்டிடமாகும். இது இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ந்த பெரிய ஏரியில் அமைந்துள்ள செச்சையின் வரலாறு. துறையூர் மக்களின் பெருமைக்கும் கெளரவத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய அடையாளம், மண்ணின் மகுடம் மற்றும் ஆன்மீக தளம். ஆதாரம் : அருள்மிகு குமார தேவர் திருமடம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) 07-10-2001 ல் வெளியிட்ட சீர்வளர் சீர் ஆதி சிவபிரகாச சுவாமிகள் வரலாறு - நூல்

Share: