ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி செவ்வாய் அன்று திருவிழா தொடங்கி, சித்திரை மாதம் முதல் செவ்வாய் வரை விழா நடைபெறும். இதில் பங்குனி முதல் செவ்வாய் அன்று பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 2–ம் செவ்வாய் அன்று காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று, அன்று இரவு முதல் அடுத்த செவ்வாய் காலை வரை தொடர்ந்து 8 நாட்கள் ஆலய நடை அடைக்கப்படும். காப்பு கட்டி நடை சாத்தப்பட்ட மறுநாள் ஆயிரம் பானையில் பொங்கல் வைத்து பூஜை நடைபெறும்.
பங்குனி 3–ம் செவ்வாய் அன்று நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 8 நாட்கள் இரவு, பகலாக நடை திறந்திருக்கும். திருத்தேர் தலையலங்காரம் இரவு முழுவதும் நடைபெற்று, 30 அடி தேரில் ஓலை பிடாரி அம்மனும், 29 அடி தேரில் மதுரைக் காளியம்மனும் எழுந்தருள்வார்கள். இவ்விரு தேர்களையும் பக்தர்கள் தங்கள் தலையிலும், தோளிலும் சுமந்து திருவீதி உலா வருவார்கள்.