கண்ணனூர் வரலாறு
(Kannanur History)
கண்ணனூர் எனும் ஊர் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராட்சி ஆகும். கண்ணனூர் துறையூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், துறையூரில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் அமைந்துள்ள நகரம் ஆகும். கொல்லிமலையில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் அய்யாற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது ஊர் கண்ணனூர். "வள்ளுவப்பாடி நாடு" என்பது கண்ணனூர் என்னும் ஊரை மையமாகக் கொண்ட நாட்டுப்பகுதி எனத் தெரியவருகிறது. இப்பகுதியில் இக்காலத்திலும் வள்ளுவன் குடியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர். இந்த வள்ளுவப்பாடி நாடுதான் புகழேந்திப் புலவரைப் போற்றிப் பேணிய சந்திரன் சுவர்க்கியின் மள்ளுவநாடு என சோழர்க்கால வரலாற்று ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவ்தாக மு. அருணாசலம் தெரிவிக்கிறார்.
வேளாண்மைத் தொழில் முதன்மையாக திகழ்கிறது. இது அய்யாற்றின் நீர் வளத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நெசவுத்தொழில், மண்பாண்டத்தொழில், புட்டுத்தொழில் (பிட்டு) முதலான தொழில்களும் செய்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தை கூடுகிறது.சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராம மக்கள் இச்சந்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊர் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்பதற்கு சான்றாக இராசராச சோழ தேவன் (985-1014) காலத்துக் கல்வெட்டு, கண்ணனூர் சுந்தர ராசப் பெருமாள் கோயிலில் கல்வெட்டு உள்ளது. கண்ணனூரில் சுமார் 6233 மக்கள் வசிக்கின்றனர். அதில் ஆண்கள் 3108 மற்றும் பெண்கள் 3125 நபர்கள் உள்ளனர்.
கண்ணனூர், கி.பி.12-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஹொய்சாளர்கள் ஆட்சி செய்துவந்தனர், மேலும் கண்ணனுரை அவர்கள் தலைநகரமாகவும் கொண்டிருந்தனர். ஹொய்சாள மன்னர்கள் “புலிகடிமால்“ என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.திருச்சி அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் ஹொய்சளர்களின் குலதெய்வமான தாய்த்தெய்வமாவாள். மேலும், ஹொய்சாளேஸ்வரர் கோயில் இம்மன்னர்கள் கட்டியதாகும். இந்த வரலாறு சிறப்பானது கண்ணனூரில் புள்ளம்பாடி கால்வாய் என்னுமிடத்தில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அகழாய்வுக் குழிகளிலிருந்து கால்வாயிலிருந்து வெட்டிவிடப்பட்ட வாய்க்கால் (கல் அமைப்புடன் கூடியது), சொரசொரப்பான சிவப்பு பானையோடுகள் மற்றும் கருப்பு பானையோடுகள், சீன மட்பாண்டங்கள், சுடுமண் மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், காதணி, உடைந்த கத்தியின் ஒரு பகுதி, இரும்பு ஆணிகள், இடைக்காலத்தைச் சேர்ந்த கூரை ஓடுகள், செங்கல் கட்டுமானம் மற்றும் நீரோடும் வடிகால் போன்ற தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டன. இடைக்காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானம் ஒன்றும், கல் வாய்க்கால் ஒன்றும் இவ்வகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது. இதன் காலம் பொ.ஆ.11-14 என வரையறுக்கப்பட்டிருக்கிறது.
Share:
