துறையூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இப்பகுதி மக்களின் கல்வி விகிதச்சாரம் 70% ஆகும். துறையூர் பழங்காலம் முதலே செல்வச் செழிப்பாகவும், தமிழ் உணர்வுடனும், கல்வி மற்றும் இயற்கை தழுவிய நகரமாக அன்று முதல் இன்று வரை அதே அழகுடன் திகழ்கிறது. இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் நகை வியாபாரம் ஆகும். சைவமும் வைணவமும் தளைத்து வளர்ந்த காலத்தில் இப்பகுதியில் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.


துறையூர் அருகில் உள்ள பெருமாள் மலை (அடிவாரம்) திருத்தலம் பிரசன்னா வெங்கடாசலபதி கோயில், சோழ மன்னருள் ஒருவரான கரிகாலற்சோழ பெருவளத்தானின் பேரன் ஒருவரால் கட்டப்பட்டது. துறையூரின் அடையாளமாக பெரிய ஏரியின் நடுவில் உள்ள செச்சை கோட்டை திகழ்கிறது. செச்சை என்கின்ற அரண்மனை கி.பி 14 ஆம் நுற்றாண்டில் துறையூரை ஆண்ட லிங்கதுரை மன்னரால் கட்டப்பட்டது. சின்ன ஏரி, பெரிய ஏரி, குட்டைக்கரை என மூன்று நீர்த்துறைகளுக்கு மத்தியில் அமைந்த ஊர் என்பதால் துறையூர் என்றும் துரைகள் என அழைக்கப்பட்ட பெரும் ஜமீன்தார்கள் ஆட்சி செய்த ஊர் என்பதால் துரையூர் என அழைக்கப்பட்டு, நாளடைவில் அது மருவி, துறையூர் ஆகி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


முன்பு சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் துறையூர் இருந்தது. பின்பு, விஜயநகர மன்னர்களின் படையெடுப்பால், ஜமீன்தார்களின் ஆட்சிக்குள் வந்தது. பெரிய ஏரியின் மையத்தில் சிதைந்த நிலையில் இருக்கும் மாளிகை, அந்தக் காலத்தில் ஜமீன்தார்களின் ஓய்விடமாக இருந்து உள்ளது. பெரிய ஏரியின் கடைக்காலில் செச்சைமுனி கோயில் அமைந்து உள்ளது. செச்சைமுனி என்பவர், ஜமீன்தார்கள் காலத்தில் பெரிய ஏரியை நிர்மாணிப்பதில் முக்கியப் பொறுப்பில் இருந்து வீர மரணம் அடைந்தவர். துறையூருக்கு அருகாமையில் பச்சமலை, புளியஞ்சோலை மற்றும் மயில் ஊற்று அருவி ஆகியவை 20 கிலோமீட்டர் தொலைவுகளில் அமைந்து துறையுருக்கு எழில் சேர்க்கின்றன. துறையூர் அன்று முதல் இன்று வரை வரலாறு சிறப்புடன் திகழ்கிறது.


கடைகள் விவரம் சில